இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு போர் விமானம் இன்று இலங்கையிடம் முறைப்படி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-05 நுழைவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்துக்குள் இன்று சீனாவின் உளவு கப்பல் உள்ளே நுழைகிறது. இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பல் நுழைவதற்கு தொடக்கம் முதலே இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், இலங்கை தடுமாற்றமான நிலைப்பாட்டை மேற்கொண்டது. இது இந்தியாவை கடுமையாக அதிருப்தி அடைய வைத்தது. முதலில் சீனாவின் உளவு கப்பலை உள்ளே நுழைய கூடாது என்றது இலங்கை; பின்னர் சற்று தாமதப்படுத்தி உள்ளே வரலாம் என்றது. இறுதியாக இன்று முதல் ஒரு வார காலம் இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் இந்தியாவின் டோர்னியர் 228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம், இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. டோர்னியர் விமானம் இன்று இலங்கை அரசாங்கத்திடம் முறைப்படி வழங்கப்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படை துணைத் தலைவர் கோர்மேட், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் டோர்னியர் விமானம், முறைப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் கூறுகையில், இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது. வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.