கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளி வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள். இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. கோகுல்ராஜ் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். கோகுல்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டுவந்தார்கள். 2015ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அதையடுத்து 6 பேரைக் கைதுசெய்தார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜூலை 2ஆம் தேதி உடலைக் கொடுத்தார்கள். இதனையடுத்து கோகுல்ராஜ் உடலை பெற்றோர்கள் வாங்கி அடக்கம் செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்தது. அதுவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக மாறியது. வழக்கில் தொடர்புடைய தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர். அவ்வப்போது ஆடியோவும் வெளியிட்டார் யுவராஜ். இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்குக் காரணம் யுவராஜ்தான் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது. டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகளின் டார்ச்சரே காரணம் என்றும், தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் யுவராஜ். தலைமறைவாக இருந்தாலும் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் அவரது பேட்டி வெளியானது.

திடீரென நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரண் அடைய உள்ளதாக கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் யுவராஜ். 100 நாட்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபார் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்தார்.இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, பின்பு, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 2015 டிசம்பர் 25ஆம் ஆண்டு யுவராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்ற வழக்கில் கடந்த மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்துள்ளார். சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல யுவராஜின் கார் டிரைவருக்கும் மூன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளிகள் 8 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பளித்தார். சங்கர், அருள் செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோகுல் ராஜின் தாயார் சித்ரா, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் மகன் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம் 10 நபர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியது. ஆனால் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐந்து பேரையும் விடுதலை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது . இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணையை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.