நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கொடை விழா நடைபெற்று கொண்டிருந்த போது சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா (வயது27) தலைமையில் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவின் கழுத்தை அறுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது முகம் மற்றும் தோள்பட்டையில் கத்தியால் குத்தினார். உடனே அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்து கத்தியை அவரிடம் இருந்து பறித்தனர். படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கழுத்து, முகம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற அந்த நபர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பழவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பதும், அவர் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆறுமுகம் மதுகுடித்து விட்டு நெல்லையில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஆறுமுகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகம் கோவில் கொடை விழாவிற்கு வந்திருந்த சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.