இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இலவசங்கள் கொடுப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நன்கு படித்தவர். அவர் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்களால் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? இந்தியாவிற்கு 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது, தமிழகத்திற்கு 6.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமானது, அவமானகரமானது. இதில் பெருமை அடைய ஒன்றும் இல்லை. பிறகு எதற்கு இப்படியான இனிப்பான வெற்று அறிவிப்புகளை கொடுக்கிறீர்கள். தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம். இதனை எப்படி எடுத்துக்கொண்டாலும் ஒரு வகையான லஞ்சம்தான். அத்தியாவசிய தேவையான கிரைண்டர், மிக்சி, லேப்டாப், மின்விசிறி, டிவி போன்றவை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டிய ஒன்று. இந்த அடிப்படை தேவைகளையே நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிலைக்கு வைத்ததை எப்படி சாதனையாக சொல்ல முடியும்.
முதலில் ரேஷனில் ரூ.2க்கு அரிசி கொடுத்தீர்கள், பிறகு ரூ.1க்கு கொடுத்தீர்கள், இப்போது இலவசமாக கொடுக்கிறீர்கள். இப்படியே இலவசமாக எத்தனை ஆண்டுகள் கொடுப்பீர்கள்? எனவே பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்றவர் இப்படி பேசக்கூடாது. இலவசம் என்பது மோசமான திட்டம், இதனால் நாடு ஒரு புள்ளி அளவிற்கு கூட வளராது.
பா.ஜ.க.வும், காங்கிரசும் இருவேறு கட்சிகள். ஆனால் கொள்கைகள் ஒன்றுதான். சவுண்டு இந்துத்துவா, பி.ஜே.பி. என்றால், சாப்ட் இந்துத்துவா இந்த காங்கிரஸ். காங்கிரசும், தி.மு.க.வும் இஸ்லாமியர்களுக்கு தங்களைத் தவிர வேறு வேறு நாதியில்லை என்று கருதுகிறார்கள். அவர்கள் பி.ஜே.பி.க்கு வாக்களிப்பது இல்லை. பாஜக பெற்று வரும் இந்து வாக்குகளை கவருவதற்காக 90 சதவீத இந்துக்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி சொல்கிறார். சுதந்திர கொடியை கையில் பிடிக்கும் தகுதி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.