டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கும் – அரவிந்த் கெஜ்ரிவால் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மதுபானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு, மதுபான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்த புதிய மதுபான கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதனால் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தொடர்ந்து, துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தது. ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான எதிர்வினையாற்றினார்.
இந்த நிலையில் மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியா மற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் வீடு உட்பட 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில், “சிபிஐக்கு எனது வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உண்மை வெளிவர விசாரணைக்கு ஒத்துழைப்பேன். இதுவரை என் மீது பல வழக்குகள் பதியப்பட்டாலும், எதுவும் வெளிவரவில்லை. இதிலும் எதுவும் வராது. நாட்டில் நல்ல கல்விக்காக பணியாற்றும் எனது நடவடிக்கையை யாராலும் நிறுத்த முடியாது. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் நாங்கள் நேர்மையானவர்கள். நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் கொடுக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதனால் தான் நமது நாடு இன்னும் முதலிடத்திற்கு முன்னேறவில்லை. டெல்லியில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் இரு அமைச்சர்களும் சிபிஐ பார்வையில் உள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
இந்த ரெய்டு குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த சோதனையில் எதுவும் வெளிவராது. கடந்த காலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று மனிஷ் சிசோடியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.