இந்தியாவுடன் நல்லுறவு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அது மேலும் விரிசல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பல முறை மத்திய அரசு உறுதியுடன் கூறியுள்ளது. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த, அமைதியான, பயங்கரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட வேண்டும். அதனை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என பல முறை இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய நாட்டுத் தூதரக அதிகாரியுடனான சந்திப்பின்போது இந்தியாவுடனான உறவு குறித்து ஷபாஸ் ஷெரீப் பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க, ஜம்மு – காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான மற்றும் அமைதியான தீர்வு எட்டப்பட வேண்டும். இந்தியாவுடன் அமைதியான உறவுக்கே விரும்புகிறோம். நாட்டில் அமைதி நிலவ வேண்டும். தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்ல உறவு இருப்பது அவசியம்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷபாஸ் புதிய பிரதமரானார். அப்போது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவிக்க, நன்றி தெரிவித்த ஷபாஸ், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாகக் கூறினார்.