பழனி கோவிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மேலும் பல கோவில்களிலும் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசு அந்தந்த கோவில்களில் முக்கியமாக உள்ள பிரசாதத்தை இலவசமாக வழங்க முடிவு செய்து அறிவித்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலமும், முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வருகை தரும் கோவிலாக உள்ளது. பழனி என்றாலே பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது பஞ்சாமிர்தம்தான். மலை வாழைப்பழம், கரும்பு சர்க்கரை, தேன், நெய், பேரிச்சை, கற்கண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது.
இந்த பஞ்சாமிர்தம் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பழனிக்கு சாதாரண நாட்களில் சுமார் 30 ஆயிரம் வரையிலும், திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் பல லட்சம் பேர் வருவது வழக்கம்.
பழனி பஞ்சாமிர்தத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. பஞ்சாமிர்தத்தை ஆன்லைன் மூலம் தேவஸ்தானத்தில் புக்கிங் செய்தும் பக்தர்கள் பெற்று வருகின்றனர். இத்தனை பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தம் இன்று முதல் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தொன்னையில் பஞ்சாமிர்தம் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக தொன்னை தயாரிக்கும் எந்திரம் கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்தருக்கும் தலா 40 கிராம் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி கோவிலில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.