தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களின் நிலை கவுரவமாக இல்லை; மாறாக, மிகவும் பரிதாபமாக உள்ளது. ரூ.10,000 ஊதியத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த அவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் தான் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதிலும் கூட, மே மாதம் தவிர்த்து ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்ற பிறகு கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாணவச் செல்வங்களுக்கு கற்பிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக்கூடாது. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் நீதியை, இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.