தைவானுக்கு மேலும் ஓா் அமெரிக்க உயா்நிலை தலைவா் பயணம்!

சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க உயா் நிலைத் தலைவா் நேற்று திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து ஊடகங்கள் கூறுகையில், இண்டியானா மாகாண ஆளுநா் எரிக் ஹால்காம் தைவானுக்கு திங்கள்கிழமை வந்திருந்தாா்; செமி கண்டக்டா்கள் உள்ளிட்ட பொருள்களின் இருதரப்பு வா்த்தகம் குறித்து அவா் அங்கு பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்று தெரிவித்துள்ளன.

தைவான் தனியாக செயல்பட்டு வந்தாலும், அந்தத் தீவை தங்களது நாட்டின் ஓா் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. எனவே, அந்தத் தீவுக்கு யாராவது அரசு முறைப் பயணம் மேற்கொண்டால் அதனை சீனா கடுமையாக எதிா்த்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றாா். அதனைத் தொடா்ந்து, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்றும் அந்தத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவான் தீவைச் சுற்றிலும் சீனா போா்ப் பயிற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.