பீகார் சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா!

பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டசபை சபாநாயகரான பாஜகவின் விஜய்குமார் சின்ஹா கடைசிநேரத்தில் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக தமக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து பதவியில் இருந்து சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுத்து வந்தார்.

பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டதால் ஆர்ஜஏடி-காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். நிதிஷ்குமாரின் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 243 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது மொத்தம் 241 இடங்கள். 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய நிலையில் நிதிஷ்குமார் அரசுக்கு மொத்தம் 165 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆகையால் நிதிஷ்குமார் அரசு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேநேரத்தில் சபாநாயகரான பாஜகவின் விஜயகுமார் சின்ஹாவால் மாநில அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லை என ஜேடியூ-ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர். பொதுவாக இத்தகைய நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், ஆட்சி மாறுதல்களின் போது சபாநாயகர் ராஜினாமா செய்வது வழக்கம். ஆனால் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா பதவியை ராஜினாமா செய்ய மறுத்து, நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் நிராகரித்தார். இதற்கு விஜய்குமார் சின்ஹா கூறிய காரணம்தான் ஆச்சரியப்பட வைத்தது. ஆகஸ்ட் 9-ந் தேதியன்று கொடுக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் முறையாக இல்லை; ஆகஸ்ட் 10-ந் தேதிதான் முறையான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தனர்; ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள 14 நாட்கள் அவகாசம் தேவை. ஆகையால் தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றார் விஜய்குமார் சின்ஹா.

இந்த குழப்பமான சூழ்நிலையில் இன்று பீகார் சட்டசபை காலை கூடியது. சட்டசபை கூடியதும் பேசிய சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா, எனக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தெளிவானதாக இல்லை என்றார். பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும் விஜய்குமார் சின்ஹா கூறினார். இதனால் பீகார் அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.