நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழைய கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, மீண்டும், ஆட்சி அமைத்துள்ளார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, கடந்த 10 ஆம் தேதி, நிதிஷ் குமார் பதவி ஏற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, பீகார் மாநில அமைச்சரவை பதவி ஏற்றது. இதில், நிதிஷ் குமார் தரப்பில், 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்ற நிலையில், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை, பீகார் மாநில சட்டப்பேரவையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ராஜினாமா செய்த நிலையில், துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பேசியதாவது:-

பீகார் மாநில சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். என்னை எதிர்த்து பேசினால் தான் உங்கள் கட்சியில் பதவி கிடைக்கும். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

நான் ஏதோ ஆக வேண்டும் என்று நினைப்பதாக எண்ணி, ஊகங்களின் அடிப்படையில் என்னை கூட்டணியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால், எனக்கு எதுவும் ஆக விருப்பமில்லை. மேலும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, நான் முதல்வராக தயாராகவில்லை. பாஜகவிடம் நான் அப்போதே கூறினேன். நீங்கள்தான் அதிக தொகுதிகளில் வென்றுள்ளீர்கள். உங்கள் கட்சியிலிருந்து தான் முதல்வர் பதவி வகிக்க வேண்டும். ஆனால், நான்தான் முதல்வராக வேண்டும் என்று எனக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இறுதியில் நான் முதல்வராக ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-

நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். இந்தக் கூட்டணிக்கு முடிவே கிடையாது. இது நீண்ட இன்னிங்க்ஸில் தொடரப் போகிறது. இந்தக் கூட்டணி பிகார் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்காக சேர்ந்துள்ளது. யாராலும் இதைப் பிரிக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையடைந்து வருவதால் 2024 தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பாஜக அச்சமடைந்துள்ளது. பிகாரில் பாஜக ஆட்சியை இழந்தபிறகு அவர்களின் உறவினர்களான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரை ஏவி விடுகின்றனர். நான் வெளிநாடுகளுக்கு சென்றால் நோட்டீஸ் வழங்கும் மத்திய அரசு, நீரவ் மோடி போன்ற மோசடியாளர்கள் வெளிநாடு சென்றால் எதுவும் செய்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.