நடிகையான ஹரியானா பாஜக நிர்வாகி சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஹரியானாவை சேர்ந்தவர் சோனாலி போகத் (வயது 43). இவர் பாஜகவின் மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இவர் சில டிவி தொடர்களிலும் நடித்தார். சமீபத்தில் டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தார். இன்ஸ்டாவிலும் பல வீடியோக்களை பதிவிட்டார். இதனால் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
பாஜக சார்பில் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் ஹரியானா மாநிலம் அதம்பூர் தொகுதியில் சோனாலி போகத் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குல்தீப் பிஷ்னோய் வெற்றி பெற்றார். இந்நிலையில் எம்எல்ஏவான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். ஆதாம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் சோனாலி போகத் பாஜக சார்பில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சோனாலி போகத் கோவாவுக்கு சென்றார். திங்கட்கிழமை இரவு விருந்தில் அவர் பங்கேற்று உணவு சாப்பிட்டார். அதன்பிறகு மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக கூறி வடக்கு கோவாவில் உள்ள செயின்ட் அந்தோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இயற்கைக்கு மாறான சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே சோனாலி போகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறினர். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தான் சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு இன்று அஞ்சுனா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார். அதாவது அவர் இறப்பு முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேசினார். இந்த வேளையில் ஏதோ நடப்பதாக அவர் கூறிவிட்டு போனை வைத்த நிலையில் தான் இறந்துள்ளார். இதனால் சந்தேகம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறினர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இன்று குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சோனாலி போகத் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அவரது உடலில் காயங்கள் இருப்பதற்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர்கள் மற்றும் இரவில் அவர் பங்கேற்ற விருந்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசாரின் கவனம் சென்றுள்ளது. அதன்படி சோனாலி போகத்தின் உதவியாளர்களான சுதீர் சங்வான், சுக்வீந்தர் வாசி ஆகிய இருவரின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு இவர்களிடம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். இவர்கள் 2 பேரின் பெயரையும் சோனாலி போகத்தின் சகோதரர் தனது புகாரில் கூறி இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை தீவிரமாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் ஐஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய், “இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் அஞ்சுனா போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுதிர் சங்வான், சுக்விந்தர் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது” என்றார்.