முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தேனி மாவட்டம் கூடலுார் சதீஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பாரதிய கிஷான் சங்க உறுப்பினர். முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை 2018 ல் அரசாணை வெளியிட்டது. இது ரூ.1020 கோடியில் செயல்படுத்தப்படும். திருவாங்கூர் திவான், சென்னை மாகாணம் இடையே 1886 ல் 999 ஆண்டுகால ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முல்லைப் பெரியாறு நீரை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதற்கு முரணாக தற்போதைய திட்டத்திற்கு குடிநீர் எடுக்க உள்ளனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். குடிநீர் திட்டத்திற்கான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சதீஷ் பாபு மனு செய்தார்.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, இது தமிழகம், கேரளா சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.