முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும், என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் வந்த போது அவர்களை வரவேற்க வந்த இரு கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.கவை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதேபோல் காயம்பட்ட ம.தி.மு.கவினர் கொடுத்த புகாரில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்கின் விசாரணையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. இந்த இரு வழக்கும் கடந்த 18-ஆம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில் ம.தி.மு.க வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவ்வழக்கு தொடர்பாக சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை விசாரித்த நீதிபதி ம.தி.மு.க வினர் சமரசம் செய்து கொண்டதால் சீமான் உள்ளிட்டோரை அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். ஒரு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சீமான் காவல்துறை தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்களில் சலுகை வழங்குவதால் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். நாட்டின் கடன் தொகை ரூ.100 லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
இலவசகளால் ஒரு தேசம் வளராது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். இது வாக்கை பறிப்பதற்கான வெற்று கவர்ச்சி திட்டம். கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதனை கடன் வாங்கி படிக்க வேண்டிய நிலைமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. வேளாண் குடிமக்கள் கடனாளியாவதற்கு வேண்டியதை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்யாமல் கடன் மேல் கடன் வழங்குகிறார்கள். இலவசங்களை கொடுப்பதற்கான பணத்தை எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை. இலவசங்களை கொடுப்பதை எதிர்க்கும் பாஜக வேளாண் குடிமக்களுக்கு ஏன் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் எனவே இதுவும் ஒரு ஏமாற்று வேலை. வேளாண் குடிமக்களை கையேந்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது.
பஸ் பாஸ், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாக பெறும் மாணவர்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுதான் கல்வி கற்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களை அரசே தான் ஊக்குவிக்கிறது. கல்வி தரத்தை உயர்த்தி கர்நாடகா மற்றும் கேரளாவில் மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளியில் உயர்ந்துள்ளது. ஆனால் இங்கு தனியார் பள்ளிகள் தரம் மட்டுமே உயர்ந்து கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள் தரம் உயரவில்லை. மற்ற நாடுகளில் அரசு நடத்தும் எல்லாம் நன்றாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டும் அது நன்றாக இல்லை.
திருடன் தான் மற்றவர்களை பார்த்து திருடன் என்பார். அதுபோல தான் உண்மையான சங்கி மற்றவர்களை பார்த்து சங்கி சங்கி எனக் கூறுகிறார்கள். அந்த வகையில் தான் என்னை சங்கி என்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பிரதமரை நலத்திட்ட விழாவிற்கு கூப்பிடுவதில்லை. ஆனால் தமிழக முதல்வர் கூப்பிடுகிறார். எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிகல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார், அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் திமுகவில் இணைந்தார்கள் என தெரியவில்லை. நமக்கு நாமே திட்டம் என்பது அமைச்சர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். மக்களுக்கு நாமம் தான்.
லிம்கா நிறுவனத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனம் முறையாக பணம் செலுத்தி படத்தை வாங்கி அதை வெளியிடுகிறார்கள். ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவரமுடியாமல் இருக்கும் பல படங்கள் வெளி வந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடிகர் சரத்குமார் நடிப்பது தவறு. அவர் அதில் நடிக்க கூடாது. சூது எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்பது என்பது முதல் குடிமகன் என்ற அடிப்படையில் முதலில் முதலமைச்சர் அவரின் கருத்தை கூறட்டும். அதன்பிறகு மக்களின் கருத்தை கேட்கட்டும். மக்கள் கருத்தை விட மக்கள் நலனே முக்கியம் அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். கருத்து கேட்டால் பல கருத்துக்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வரும். இவ்வாறு சீமான் கூறினார்.