ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்’ என்று பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வந்தார். கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஈரோடு வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை 10.30 மணிக்கு பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்.பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம். பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழகத்தில் தான் அதிகம். முதல்வராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது. என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்திக்கடவு – அவிநாசி திட்டமானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி. உபரிநிரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1652 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய ஆறு நீர்உந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, இப்பணிகளை விரைந்து முடித்திட நீர்வளத்துறையைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணணுண்ணி, நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.