பிரதமர் கூறிய ‘பெஸ்ட் புதுச்சேரி’ நிறைவேறிய பிறகு தான் அடுத்த முறை புதுச்சேரி மக்களை சந்திப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
ஒருநாள் அரசுமுறை பயணமாக புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரை வழங்கிய இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 204 கோடி ரூபாய்க்கான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். மேலும், 45 கோடி ரூபாய் மதிப்பில் குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, 33 கோடி ரூபாய் மதிப்பில் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு 49 கோடி ரூபாய்க்கு கட்டிடட வசதிகள் உட்பட பல திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
“புண்ணிய பூமியான புதுச்சேரியை வணங்குகிறேன். பாரதி, அரவிந்தரின் கர்ம பூமியாக புதுச்சேரி திகழ்கிறது. விவிஎஸ் ஐயர், பாரதிதாசன் ஆகியோரை சேவையாற்ற அனுப்பியது. மக்களின் தீர்ப்பால் தான் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு செழிப்பாக இருக்கிறது. புதுச்சேரியில் சூரிய சக்தி மூலம் 26 மெகவாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பிரதமர் கூறிய பெஸ்ட் புதுச்சேரியை மாற்றி காட்டுவோம். புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றி விட்டு தான் அடுத்த முறை மக்களை சந்திக்க வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.