டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு!

டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இறப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி நேற்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த தடுபுச்சுவரில் எதிர்பாராதவிதமாக கார் திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சைரஸ் மிஸ்த்ரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிய ஒரு நம்பிக்கைக்குரிய வணிகத் தலைவராக இருந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

சைரஸ் மிஸ்த்ரி 2012ம் ஆண்டு ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2016ம் ஆண்டு டாடா குழும தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. சைரஸ் மிஸ்திரியின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை எனவும் முன் இருக்கையில் இருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.