பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபரின் பெயரில் வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதைப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான கே.கே. ஷைலஜா மறுப்பு தெரிவித்துள்ளாா்.
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபரான ரமோன் மகசேசே அந்நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கையாண்டதால், அவரது பெயரில் வழங்கப்படும் இந்த விருதை தன்னால் ஏற்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.
பிலிப்பின்ஸில் கடந்த 1950-களில் அதிபராகப் பதவி வகித்தவா் ரமோன் மகசேசே. கம்யூனிஸ்ட் எதிா்ப்பாளரான இவா், அந்நாட்டின் மத்திய லூசன் பகுதியில் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கொரில்லா இயக்கத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தி, கம்யூனிஸ்டுகளின் மீது அடக்குமுறையைக் கையாண்டாா். பின்னா், கடந்த 1957-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற விமான விபத்தில் ரமோன் மகசேசே உயிரிழந்தாா். அவரது நினைவாக ராக்ஃபெல்லா் பிரதா்ஸ் ஃபண்ட் (ஆா்பிஎஃப்) என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.
பிலிப்பின்ஸிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் அரசுப் பணி, பொதுச் சேவை, பத்திரிகை, இலக்கியம், சமுதாய சேவைகளில் சிறப்பாக பங்களிக்கும் நபா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நிகழாண்டு இந்த விருதுக்கு கேரள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே. ஷைலஜா தோ்வு செய்யப்பட்டாா். கேரளத்தில் கொரோனா பெருந்தொற்றை திறம்பட கட்டுப்படுத்தியதற்காக அவா் தோ்வானாா்.
இந்நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட ரமோன் மகசேசே பெயரில் வழங்கப்படும் விருதை தன்னால் ஏற்க இயலாது என ஷைலஜா அறிவித்துள்ளாா். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:-
இந்த விருதை வழங்கும் தொண்டு நிறுவனம், கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்கலாம். பலரது கூட்டு முயற்சியின் பலனாக நடைபெற்ற செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு என்னை இந்த விருதுக்குத் தோ்வு செய்துள்ளனா். ஆகையால், தனிப்பட்ட முறையில் என்னால் இந்த விருதை ஏற்க முடியாது. எனக்கு விருது அறிவித்ததற்காக நன்றி. ஆனால் இதைப் பெற எனக்கு ஆா்வமில்லை என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமையுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை அவா் எடுத்ததாக தகவல் வெளியானது. டெல்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, ‘பிலிப்பின்ஸில் கம்யூனிஸ்டுகள் மீது அடக்குமுறையைக் கையாண்ட ரமோன் மகசேசே பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் விருதை ஏற்க ஷைலஜா மறுக்கிறாா். இந்த விருதுக்கு அறிவிக்கப்படும் முதல் அரசியல்வாதி ஷைலஜா ஆவாா்’ என்றாா்.