ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் சென்று நல்லாசிரியர் விருதை பெற்றது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார். அந்த வகையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த் ராஜா உள்ளிட்ட 46 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கினார்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் மேடையில் தோன்றி அனைவருக்கும் ஆச்சியத்தை ஏற்படுத்தினார். ஒரு மாணவன் போல் எளிமையான தோன்றத்துடன் வணக்கம் கூறியவாறு குடியரசுத் தலைவரை நோக்கி ஆசிரியர் ராமச்சந்திரன் நடந்து வந்து விருது வாங்கியது குடியரசுத் தலைவரது கவனத்தை ஈர்த்தது.
எப்போதும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் ஆசிரியர் ராமச்சந்திரன் மாணவ-மாணவிகளிடம் அன்போடும், கணிவோடும் நடந்துக்கொள்வார். அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் வளர்த்து வருவதோடு, அந்த கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் ராமச்சந்திரன். எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா காலத்தில் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காமல் இருக்க 30 மாணவர்களுக்கு ஆன்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தவர் ராமச்சந்திரன், பள்ளியின் செயல்பாடுகளுக்கு தனியார் யூடியூப் பக்கம், தமிழர்களின் தொன்மையை அறிய நூலகம் என தனது பள்ளியை திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். அதனால் தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான நபர் என ராமநாதபுரம் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், திரவியம் ராஜ் என்ற மகனும் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். ராமசந்திரன் தனது தொடக்கக் கல்வியை செம்பொன்குடி தொடக்கப் பள்ளியில் படித்தார். அதன் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருவரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு முயன்ற நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை காரணமாக மதுரையில் டீக்கடையில் வேலை செய்துள்ளார். அதன் பின் 2000ஆம் ஆண்டு முதல் 2002 வரை மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். பின்பு பணி கிடைக்காததால் மூன்று ஆண்டுகள் திருப்பூரில் வேலை செய்துள்ளார்.
பின்னர் 2005-ல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் பணியில் இருந்து கொண்டே பிஎஸ்சி கணிதம், பி.எட், எம் எஸ் சி கணிதம் அனைத்தையும் படித்து முடித்தார். 2006 ஆம் ஆண்டு போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றார். பிறகு, 2008ல் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டு இப்போதுவரை அப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் ராமசந்திரன் சேவையை பாராட்டி விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கியுள்ளன. மேலும், 2018ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை இவர் பெற்றுள்ளார்.
ராமசந்திரன் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 30 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராமச்சந்திரன் தன் சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஐசிடி (Information Communication Technology) தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், டேப்லெட் மற்றும் மடிக்கணினி பயன்பாடு, பியானோ வாசிப்பு, சிலம்பம், ஓவியம், என மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரும் பயிற்சிகளை தருகிறார். பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்கும் வகையில் மூலிகை தோட்டம் அமைத்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வி திறன் மேம்பாட்டிற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இப்பள்ளிக்கு இங்கிலாந்து நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று கொடுத்து கௌரவித்துள்ளது.
ராமச்சந்திரன் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதுடன் இவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அவரை ‘மாமா, சித்தப்பா, பெரியப்பா, மச்சான், மாப்பிள்ளை’ என்று உறவு முறை வைத்து அழைக்கின்றனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் முடி திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் ராமசந்திரன் நேரடியாக மாணவர்கள் வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு முடி திருத்தி விட்டுள்ளார். பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கும் கல்விக்கும் நீண்ட இடைவெளி ஏற்பட்டது. எனவே ஆசிரியர் ராமசந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகன பாஸ் பெற்று காரில் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று மாணவர்களை ஒன்று திரட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்துள்ளார்.