டெல்லியில் 5 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் நோட்டீஸ்!

தன் மீது அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக கூறி 5 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு எதிராக டெல்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா சட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

டெல்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா, காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது ₹1,400 கோடி ஊழல் செய்ததாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக டெல்லி அரசின் மதுபான கொள்கை விவகாரத்தில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியது. மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலக கோப்புகளில், அந்த துறை அதிகாரிகளே போலியான கையெழுத்து போட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆளுநர் வினய் குமார் சக்சேனா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இவ்வாறாக ஆளும் ஆம்ஆத்மிக்கும், ஆளுநருக்கும் இடையே அன்றாடம் மோதல்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சஞ்சய் சிங், அதிஷி, துர்கேஷ் பதக், சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகிய 5 பேருக்கும் எதிராக சட்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், ‘எனக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றீர்கள். டெல்லி ஆம்ஆத்மி அரசின் தோல்வியை மறைக்கும் வகையில் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றீர்கள். எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு நாட்களுக்குள் என் மீதான அவதூறுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகையில், ‘அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக பயப்பட வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதால், அவர் பயப்படுகிறாரா? அவரால் எங்களின் குரலை அடக்க முடியாது. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவோம்’ என்று தெரிவித்தன.