முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்: வேல்முருகன்

பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவுமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே பொற்கால ஆட்சியை நடத்தி வரும் மோடி அரசு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்காமல், 2024 பொதுத்தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக பல்வேறு வகையிலான யுக்திகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக, மோடி அரசின் மோசமான ஆட்சியை குறித்த விமர்சனத்தை, எதிர்க்கட்சிகள் மக்களிடத்தில் எந்த விதத்திலும் கொண்டு சேர்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஊழல், சகுனி, சர்வாதிகாரி, திறமையற்றவர், கபட நாடகம், பொய், போலித்தனம், பாலியல் வன்முறை உள்ளிட்டு பல சொற்கள் விவாதங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. மீறிப் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து அவை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, மோடியையும் பா.ஜ.க ஆட்சியையும் விமர்சனம் செய்கின்ற சொற்களை பொறுக்கியெடுத்து தடைவிதிக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துள்ள மோடி அரசு, பாசிச ஆட்சிக்கு எதிராகக் குரல்கொடுக்கும் தி வயர், குவிண்ட் போன்ற முற்போக்கு – ஜனநாயக சக்திகளால் நடத்தப்படும் இணைய ஊடகங்களை ஒடுக்குவதற்கான பணிகளையும் முடக்கி விட்டுள்ளது. பெகாசஸ், டெக் ஃபாக் செயலி, பீமா கோரேகான் வழக்கு என பல்வேறு சதிச் செயல்களை வயர் போன்ற இணையதளங்கள் வெளிப்படுத்தியதன் விளைவான நாட்டு மக்கள் முன்பாக அம்பலப்பட்டும் நிற்கும் மோடி அரசு, இணைய ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், அந்த ஊடகங்களை ஒடுக்க வேண்டும். இதுவே, மோடி அரசின் நோக்கமாக உள்ளது.

சமூக ஊடகங்களை ஒடுக்கும் மோடி அரசு இதற்காகவே, அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022-ஐ, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்திருந்தது. இதன் வாயிலாக, இணையம், கணினி, மொபைல் முதலியவற்றில் பகிரப்படும் உரை, ஆடியோ, வீடியோ என டிஜிட்டல் வடிவத்தில் செய்திகளை வழங்கும் அனைத்தையும் இச்சட்டம் ஊடகங்களாகக் கருதி பதிவு செய்ய வலியுறுத்துகிறது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கான கருவியாக, மிகப்பெரிய கருத்துரிமை சாதனமாகத் திகழும் சமூக ஊடகங்களை, கண்காணிக்கவும் ஒடுக்கவும் மோடி அரசு களம் இறங்கியுள்ளது.

தனது சர்வாதிகாரம், பாசிச ஆட்சி குறித்த விமர்சனத்தை, ஜனநாயக சக்திகள் நடத்தும் இணைய ஊடகங்கள் அம்பலப்படுத்தாவிட்டால், 2024 பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள், மீண்டும் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று மோடியும், அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிரான பாஜகவின் தேர்தல் கூட்டணியை வீழ்த்த, நாடெங்கும் பரவியுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும், ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.