மேற்கு வங்காள சட்ட அமைச்சர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை!

நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் மாவட்டம் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் நிலக்கரி முறைகேடு வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநில சட்டத்துறை அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அசன்சோலில் உள்ள மந்திரி மோலோயின் 3 வீடுகளிலும், கொல்கத்தா லேக் கார்டன்ஸ் பகுதியில் வீட்டிலும் சோதனை நடந்தது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 6 இடங்களில் இச்சோதனை பலத்த பாதுகாப்புடன் நடந்தது. சோதனை நடந்த கட்டிடங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடந்தபோது எந்த வீட்டிலும் மந்திரி மோலோய் இல்லை. அசன்சோல் உள்ள வீட்டில் இருந்த மந்திரியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து செல்போன்களை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் அமர வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள்.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரி கடத்தல் ஊழலில் மோலோய் பெயர் அடிப்பட்டு வருவதால், அதில் அவரது பங்கு என்ன என்பதை நாங்கள் கண்டு பிடிக்க வேண்டும். அவர் இந்த ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றனர். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்காக அமைச்சர் மோலோய் ஒரு முறை ஆஜராகி இருந்தார். அதன்பின் பல சம்மன்கள் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.