நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளிட்டீங்க: ஆளுநர் ரவி

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.

மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குகோரி சட்டப்பேரவையில் 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப காலம் தாமாதம் செய்ததால் இந்த ஆண்டும் தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு நேரம் 3 மணி நேரம் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். அப்போது கேரளா போன்ற சில மாநிலங்களில் மாணவிகளின் உள்ளாடையை தேர்வு அதிகாரிகள் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிபிஎஸ்இ முடிவுகள் வராமல் இருந்த காரணத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த முடிவுகள் வெளியானதை அடுத்து நேற்று பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜ்பவன் டுவிட்டரில் வெளியாகியுள்ள பதிவில், “நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.