ஓணத்துக்கு வாழ்த்து சொல்வீங்க, விநாயகர் சதுர்த்திக்கு மவுனமா?: அர்ஜூன் சம்பத்

கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் திருவிழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ஓணம் பண்டிகை வாழ்த்து செய்தியில், மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (இன்று செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். “மாயோன் மேய ஓண நன்னாள்” எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிடநிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா.கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும் எனவும் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்தும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக கன்னியாகுமரி செல்லும் வழியில் அர்ஜூன் சம்பத் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட அர்ஜூன் விடுதலை செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கம்யூனிஸ்ட் கட்சியினரை பற்றி கூறுகையில் கனவில் கூட இந்த நாடு நல்லா இருக்கணும்னு நினைக்காத ஒரே கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்பொழுது திமுகவில் ஊடுருவி அரசு எந்திரத்தையும் திமுக கட்சியினரையும் முழுக்க முழுக்க பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் உஷாராக இருக்க வேண்டும். தமிழக முதல்வரோ ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறுகிறார்; ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. இது எவ்வாறு உள்ளது என்றால் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்பதைப் போல இருக்கிறது. இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.