பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த, கர்நாடக உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பி.டி.ஏ., திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்க, ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் உட்பட சில நிறுவனங்களிடம், அன்றைய முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சமூக ஆர்வலர் ஆப்ரகாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்த, கவர்னர் அனுமதியளிக்க மறுத்ததால், 2021 ஜூலை 8ல் வழக்கை, மக்கள் பிரதிநிகள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைப் பற்றி கேள்வியெழுப்பி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு, நேற்று அனுமதியளித்தது. இதனால், எடியூரப்பா தரப்பு கலக்கத்தில் உள்ளது.