அதிமுக எம்.எல்.ஏ.,க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை: முதல்வர் ஸ்டாலின்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்களே பழனிசாமியுடன் பேசுவதில்லை. ஆனால் அவர், எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவருடன் பேசுவதாக கூறுகிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மக்களுக்காக ஓயாமல் உழைக்கிறார்கள். மக்கள் நலனுக்காக பகலிரவு பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மதுரை மாநகர வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க., மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள். மக்கள் நம்பிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் எங்களது பணி இருக்கும் என கூறியது போல் நிறைவேற்றி வருகிறோம். பொய் பிரசாரத்தை பற்றி கவலை வேண்டாம். அதனை பற்றி பேச நேரமில்லை. மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களே பழனிசாமியிடம் பேசுவதில்லை. ஆனால், எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதாக புரூடா விடுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது. தற்போது அ.தி.மு.க., ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. பழனிசாமி வகிக்கும் பதவி கூட தற்காலிகமானது தான். தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு தி.மு.க.,வை அவர் விமர்சித்து வருகிறார். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.