தேசியக் கல்விக் கொள்கையை இப்போதைக்கு டெல்லியில் அமல்படுத்த முடியாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டியானது தேசிய கல்விக் கொள்கை 2020க்கான வரைவு அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், ஏராளமான கல்வியாளர்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், இதனை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கையை இப்போதைக்கு டெல்லியில் அமல்படுத்த முடியாது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். அதனால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கல்வி சார்ந்த விஷயங்களை அனைத்து கோணங்களிலும் அணுக வேண்டும். அந்த வகையில், தேசியக் கல்விக் கொள்கை 2020ல் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. சில விஷயங்கள் அதில் இணைக்கப்பட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலும் அதனை நடமுறைப்படுத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் அதை டெல்லியில் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் கல்விக் கொள்கை பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தேசிய கல்விக் கொள்கையில் இடைவெளி இருப்பதாக கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.