தமிழகத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கிய, ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் துவங்கியது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அவருடன் பல்வேறு அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல் காந்திய தன்னுடைய நடை பயணத்தை இன்று தமிழகத்தில் நிறைவு செய்து நாளை முதல் கேரளாவில் இருந்து நடைபயணத்தை துவங்குகிறார். இன்றைய நடைபயணத்தை முடித்த பிறகு பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு எனது நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி, மதம் என பிரித்து மக்களை பிரித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட சிலருக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அநீதி அளித்து வருகின்றனர். ஒரு இந்தியர் மற்ற இந்தியரை ஒதுக்க வேண்டும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றனர். தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் என கூறினார்.