மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்துவது தான் விடியல் ஆட்சியா? என்று கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாகப் பாதிக்கும் வகையில், மின்கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, அதற்கெதிராகக் கறுப்புக்கொடி ஏந்தி, கருமைநிற உடைத்தரித்து வீட்டுவாசலில் நின்றுப் போராடிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இப்போது தனது ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. கடும் கண்டனத்திற்குரியது.
மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தின் மூன்று இடங்களில் மட்டுமே கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. என்றபோதிலும், கட்டண உயர்வுக்கு எதிராகவே அதில் பெரும்பான்மை மக்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் கணக்கிற்கொள்ளாது, அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்களை வாட்டி வதைக்கும் வகையிலான கட்டண உயர்வு அறிவிப்பினைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடு தழுவிய அளவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியினாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினாலும் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள், ஒவ்வொரு நாளையும் கடத்துவது என்பதே பெரும்பாடாக இருக்கிறது. இப்படி இருக்கையில், அவர்களது வாழ்நிலை குறித்து சிந்திக்காது மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா?.
சமூக நீதி ஆட்சியென சுய தம்பட்டம் அடித்துவிட்டு, அடித்தட்டு உழைக்கும் மக்கள் நலன்களுக்கு எதிராக கட்டண உயர்வைக் கொண்டு வருவது, திமுக அரசினுடைய கொடுங்கோன்மை ஆட்சியின் வெளிப்பாடேயாகும். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கும், நலன்களுக்கும் எதிரான மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.