திமுக அரசு விழா நடத்துவதிலும், விழா நாயகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு அதிமுக சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பிரச்னையை ஏற்படுத்தும். 8 ஆண்டுகளாக மின் கட்டணத்தை உயர்த்தாமல் அதிமுக ஆட்சி இருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் 52 சதவிகிதம் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்திக்கும். இலவச மின்சாரமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவிதம் வரை மின் கட்டண உயரும் என்ற பேரதிர்ச்சியும் செயல்பாட்டில் வந்துள்ளது.
ஒருபக்கம் சொத்து வரி உயர்வு, இன்னொரு பக்கம் மின் கட்டணம் உயர்வு என்று தமிழக மக்கள் மீது அரசு சுமையை அதிகரித்து வருகிறது. அதேபோல் கடந்த 31 நாட்களில் 133 கொலை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. திமுக அரசால் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. அதேபோல் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதுநாள் வரை ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆறு பேர் விடுதலையை நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கு எந்த முயற்சியும் எடுத்தது போல் தெரியவில்லை. 505 வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்ன ஆனது என்றே தெரியவில்லை.
திமுக அரசின் கவனம் அனைத்தும் விழா நடத்துவதிலும், விழா நாயகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. ஒருவேளை முதலமைச்சர் வரவில்லை என்றால், இளவரசருக்கு அந்த மரியாதை வழங்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டு மக்களுக்காக, என்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கேட்டால், பூஜ்ஜியம் மட்டுமே பதிலாக கிடைக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, திமுக கொண்டு வந்த திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது மவுனமாக இருந்து வருகிறார். மக்களின் குறை, நிறைகளை கனிவேடு கேட்கக் கூடியவர் தான் தலைசிறந்த முதலமைச்சராக இருக்க முடியும். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யார் பேச்சும் கேட்க மாட்டேன் நான் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக அரசின் ஓராண்டில் சாதனைகள் எதுவும் இல்லை, வேதனையை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.