திருக்குறள் குறித்து கவர்னர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழ.நெடுமாறன், பழ.கருப்பையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருக்குறளை அவமதித்ததாக கூறி கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, ஆம் ஆத்மி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பழ.நெடுமாறன் பேசுகையில், ”சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ‘திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் வேதத்தின் நகல் நூல்கள்’ என்று கவர்னர் ஆர்.என்.ரவி பழித்துள்ளார். பல சர்ச்சையான கருத்துகளையும் தெரிவித்துள்ளார். தமிழக கவர்னராக இருந்துகொண்டு தமிழ் மறை நூலான திருக்குறளை விமர்சித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் பழ.நெடுமாறன், பழ.கருப்பையா உள்ளிட்டோரை கைது செய்தனர்.