50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து கொண்டு வர முடியாத மாற்றத்தை, ராகுல் காந்தி 5 மாதத்தில் நடந்து கொண்டு வந்துவிடுவாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7ம் ராகுல் காந்தி தொடங்கினார். மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிமீ பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் பயணம், இப்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம் எதிர்க்கட்சியினர் இடையே பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
திராவிட மாடல் புத்தகம் வந்தால் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன். திராவிட மாடல் என்பது ஒரு வேடிக்கை. தமிழ் தேசியம் திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள்தான். தமிழ் தேசிய அரசியல் இதுவரை இந்த நிலத்தில், பலரால் முன்னெடுக்கப்பட்டது. அதையெல்லாம் கடந்து, இந்த தலைமுறை பிள்ளைகள், குறிப்பாக பிரபாகரன் பிள்ளைகள் அரசியல் களத்திற்கு வந்தபிறகு, பேரெழுச்சியாக வளர்ந்து வருகிறது. அதற்காகத்தான், இதுவரை இல்லாத வகையில், திரும்ப திரும்ப திராவிடம், திராவிட மாடல் என்று பேசுவதற்கு காரணம் நாங்கள்தான். இதனால் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.
மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எங்கே இருக்கிறது. சொந்த தொகுதியில் நின்று ராகுல் காந்தியால் வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால், மக்களிடம் வாக்குகளுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்று இருக்கின்றனரே தவிர, வேறு எங்கு இருக்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக எங்கு இருக்கிறது.அதேபோல், எதிர்க்கட்சி என்பது, எத்தனை இடங்கள் வென்று உள்ளே சென்று இருக்கிறோம் என்பது அல்ல. என்னவாக இயங்குகிறோம் என்பதுதான். அவர்கள் இயங்குவதுபோல் தெரியவில்லையே. ராகுல் காந்தி நடக்கிறார், அதனால் என்ன நடக்கப் போகிறது. 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு கொண்டுவர முடியாத மாற்றத்தை, 5 மாதத்தில் நடந்து ராகுல் காந்தி கொண்டு வந்துவிடுவாரா. இவ்வாறு அவர் கூறினார்.