பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பாககூட மேற்கு வங்க மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனைகளை நடத்துவதாக திரிணாமூல் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சி கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு உள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து தலைமைச் செயலகம் நோக்கி நேற்று முன்தினம் பாஜக பேரணி செல்வதாக அறிவித்தது. இதனை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜகவினர் தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தந்தனர். தெற்கு வங்கம், வடக்கு வங்கம் பகுதிகளில் இருந்து தொண்டர்களை அழைத்து வர 3 ரயில்களை வாடகைக்கு எடுத்தது பாரதிய ஜனதா கட்சி. இது அல்லாமல் ஏராளமான பேருந்துகளில் இருந்தும் பாஜக தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பாஜகவினரின் பேரணி காரணமாக தலைநகர் கொல்கத்தாவில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து ஹவுரா பாலத்தில் பாஜக தொண்டர்களை போலீசார் கைது செய்தார்கள். சந்திரகாச்சி பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும் பல பாஜக மூத்த தலைவர்கள் கைதானதால் தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.
காவல்துறையை கண்டித்து பாஜகவினர் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடபடத் தொடங்கியதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோது அவர்கள் மீது பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். கொல்கத்தால் போலீசார் ஒருவரை கட்டை மற்றும் கற்களை கொண்டு பாஜகவினர் கொடூரமாக ஓட ஓட விரட்டிப் பிடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாடலை பயன்படுத்தி நேற்று பொது சொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினர் வீடுகளுக்கு பெங்கால் அரசு புல்டோசர்களை அனுப்பி வைத்தால் என்ன செய்வது? பாஜக தனது சொந்த கொள்கையில் நிற்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.