காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உணவை பரிமாறிய மு.க.ஸ்டாலின், பின்னர் அவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதனைத்தொடர்ந்து காலை சிற்றுண்டி தொடக்க நிகழ்ச்சியில் சத்துணவு திட்டத்தில் புரட்சி தொடர்பான நூலை முதல்வர் ஸ்டாலின், இட்லி பாட்டி கமலாத்தாளிடம் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
வாழ்விலே பொன்னாள் என்று சொல்லத்தக்க வகையில் இன்று அமைந்துள்ளது. பள்ளிக்கு பசியோடு படிக்க வரக் கூடிய பிள்ளைகளுக்கு, முதலில் உணவு வழங்கிய பின், வகுப்பறைக்கு செல்லக் கூடிய வசதியை ஏற்படுத்தி உள்ளோம். சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக தான், காலை உணவு திட்டத்தை ஆதிமூலம் பள்ளியில் தொடங்கியுள்ளோம். அண்ணாவின் பிறந்தநாளில், இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
102 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த தியாகராயர், சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தக் கூடிய தீர்மானத்தை நிறைவேற்றினார். அன்று ஆயிரம் விளக்கில் தொடங்கிய திட்டம், இன்று மதுரையில் அடுத்த பரிமாணத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் கற்றல் திறனும், பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிய வந்துள்ளன.
கொரோனா பரவலுக்கு பின் காலை உணவு திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்தது. அந்த மகிழ்ச்சியை சொற்களால் சொல்ல முடியாது. ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட குடும்பத்து பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை, சமூகநீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி உரிமை என்னும் இடஒதுக்கீடு தரப்பட்டது. வறுமையோ, சாதியோ எதுவும் ஒருவரது கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்று பெரியார், அண்ணா, கருணாநிதி நினைத்தார்கள். அவர்களின் வழித்தடத்தில் வந்துள்ள நான், அவர்களின் கனவுகளை நிறைவேற்றக் கூடிய இடத்திற்கு வந்து செயல்படுத்தி வருகிறேன்.
எத்தைகைய நிதிச்சுமை இருந்தாலும், பசிச்சுமையை போக்க நாம் முடிவெடுத்து பணியை நிறைவேற்றி வருகிறோம். 1956ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் மதிய உணவு திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அதனை திமுக ஆட்சியிலும் செழுமைப்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதனை மேலும் விரிவுபடுத்தினார் முதலமைச்சர் எம்ஜிஆர். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வாரம் 5 நாட்களும் முட்டை வழங்கினார் கருணாநிதி. தொடர்ந்து வாரம் முழுக்க கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.
சென்னையில் ஒருமுறை பள்ளியில் ஆய்வு செய்தபோது, ஒரு மாணவரிடம் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, காலையில் எப்போதும் சாப்பிடுவதில்லை என்ற மாணவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட போது, பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக காலை உணவு திட்டத்தை கொண்டு வர உத்தரவிட்டேன். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்படும். இதனை இலவசம் என்றோ, தானம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.