இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, சந்தேகத்துக்குரிய நபராக கொழும்பு நீதிமன்றம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டு தீவிரவாதிகள் 9 பேர் தற்கொலைப் படையாக மாறி 3 தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அப்போதைய அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு, பெரும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சிறிசேனா, விக்ரமசிங்கே இடையே இருந்த அரசியல் கருத்து வேறுபாட்டால் தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்படவில்லை என கூறப்பட்டது. எனவே, இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், முன்னாள் அதிபர் சிறிசேனாவை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபராக அறிவித்துள்ளது. மேலும், அவர் அடுத்த மாதம் 14ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.