தமிழக அரசின் அலட்சியமே காய்ச்சல் பரவலுக்கு காரணம்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவ, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம் என, பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, 69வது வார்டில் ‘நலம்’ இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற, வானதி சீனிவாசன் கூறியதாவது:-

தமிழகம் முழுதும் ‘டெங்கு’ மற்றும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுதும், சீரமைப்பு என்ற பெயரில் மழை நீர், கழிவு நீர் கால்வாய்கள் தோண்டப்பட்டு, பல மாதங்களாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதுபோன்ற சுகாதார கேடுகளால், வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சல் பரவலுக்கு, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம். உடனடியாக கால்வாய் பணிகளை முடித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு, காய்ச்சல் குறித்து, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.