உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறிய நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய மாயாவதி, இது ‘பாஜக கட்சியின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது’ என்று பேசியுள்ளார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள லக்கிம்பூர் கேரியில் சகோதரிகளான 2 பட்டியல் இன சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து இருப்பதாக எதிர்கக்ட்சிகள் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகின்றன. ஆனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் அடியோடு குறைந்துள்ளது என்றும், இங்குள்ள சட்டம் ஒழுங்கு உலகிற்கே எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.
இந்த சூழலில், அம்மாநில சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நேற்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. சட்டமன்ற கூட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்திய பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவ் தலைமையில் தங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து சட்டப்பேரவை வளாகம் வரை பேரணியாக சென்றனர்.
அகிலேஷ் யாதவின் இந்த பேரணியை விமர்சித்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா, ”சமாஜ்வாடி கட்சிக்கு தற்போது எந்த வேலையும் இல்லை. எதிர்க்கட்சிகளின் இந்த பேரணி சாதாரண மக்கள் நலனுக்கானது அல்ல. பிரச்சினை குறித்து பேச விரும்பினால் சட்டசபையில் அது குறித்து பேச எந்த தடையும் இல்லை. எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராகவே உள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தவே செய்யும்” என்றார்.
எதிர்க்கட்சிகளை வேலையின்றி இருப்பதாக பாஜக விமர்சித்ததால் கடும் கோபம் அடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பாஜவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மாயாவதி கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் எந்த வேலையும் இன்றி இருப்பதாக பாஜக கூறியிருப்பது அந்த கட்சியின் ஆணவ சிந்தனையையும், பொறுப்பற்ற அணுகுமுறையையுமே காட்டுகிறது. மக்கள் நலன் மற்றும் பொது நலனில் நேர்மையையும், விசுவாசத்தையும் காட்டுவதே அரசின் சிந்தனையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கொடிய மனப்பான்மையை காட்டுவதாக இருக்கக்கூடாது.
உத்தர பிரதேச அரசுக்கு உண்மையிலேயே பொது நலன் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை இருக்குமேயானால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்கள் வந்திருக்காது. பணவீக்கம், வறுமை, வேலைவாய்ப்பு இன்மை, மோசமான சாலைகள், தரமற்ற கல்வி, சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து பாஜக பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.