ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை: கேரள ஐகோர்ட்டில் வழக்கு

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்று, கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது.

இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், கேரளாவில் சாலையின் பாதி பகுதியிலேயே யாத்திரை செல்ல அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இந்த மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது

இந்நிலையில் நேற்று 13-வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 2 தினங்களில் தொடங்குகிறது. இந்த நிலையில் சோனியாக காந்தி கட்சி தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை நடத்தி வரும் கே.சி. வேணுகோபால் எம்.பி.யை டெல்லிக்கு அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் நேற்று அவசரமாக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார். அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் கேரளாவுக்கு வருவார். மறுநாள் 24-ந் தேதி காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராகுல் காந்தி சாலக்குடியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டால், போட்டியில் இருந்து விலக போவதாக சசி தரூர் எம்.பி. கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினார். நாட்டைப் பிரிக்கும் அவர்களின் சித்தாந்தத்தைக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்த அவர் வெறுப்பு உணர்வு கொள்கைகளைப் பின்பற்றினால் நாடு ஒருபோதும் முன்னேறாது என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை வெறுப்பு பிரசாரம் தீர்க்கும் என்று நினைக்கிறீர்களா? பிளவுபட்ட சமூகத்தால் மருத்துவமனைகள், சாலைகள், கல்வியைக் கொடுக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வெறுப்புப் பாதையில் சென்றால், இந்தியாவால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியமில்லை. நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டு பாத யாத்திரையில் இணைகிறார்கள். இந்த நாடு சாமானிய மக்களால்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால், இன்று பரப்பப்படும் வெறுப்பு உணர்வுக்குச் சாதாரண மக்கள் தான் விலையைக் கொடுக்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் இருந்தும், நம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை கொடுப்பது ஏன்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத்தம் இந்த நாட்டைப் பிளவுபடுத்த முயல்கிறது. இருப்பினும், அதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோடிக்கணக்கான இந்தியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்தியாவை ஏற்க மாட்டோம். அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிக விலை கொடுக்கும் நிலையை மாற்ற வேண்டும். இன்று, இந்தியா முழுவதும் கோபம், வன்முறை மற்றும் வெறுப்பு நிறைந்துள்ளது. பாஜக இந்த வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. இது அவர்களின் டிஎன்ஏவில் உள்ளது. இதன் விளைவாக ஒரு சிலர் பேர் கோடிக் கணக்கில் லாபம் ஈட்டுகின்றனர். இவ்வாறு கடுமையாகச் சாடினார்.