கர்நாடக முதல்வருக்கு எதிராக ‘பே சிஎம்’ போஸ்டர்கள்!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பே சிஎம்’ என்று தலைப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. எண்ம வடிவிலான பணப்பரிமாற்ற செயலி பேடிஎம்-மின் விளம்பர போஸ்டர் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டரின் க்யூஆர் கோட் வடிவத்துக்குள், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசில், பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்களை எடுத்துரைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரில் 40 சதவீதம் இங்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பொதுப் பணித் துறை ஒப்பந்தங்கள், அரசு வேலை வாய்ப்புகள் என பல விவகாரங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில், போஸ்டர் போராட்டத்தை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது. பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் குறித்து தகவல் அறிந்த கர்நாடக அரசு, உடனடியாக போஸ்டர்களைக் கிழிக்க உத்தரவிட்டது. காவல்துறை உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.