காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியில்லை: அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை. தான் போட்டியிட உள்ளதாக அசோக் கெலாட் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன்பின்னர் அவரை தலைவர் பதவியில் அமர்த்த மூத்த தலைவர்கள் முயற்சி செய்தும் அவர் ஏற்கவில்லை. கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். நிரந்தர தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கு கட்சியினர் மீண்டும் ஆர்வம் காட்டினர். ஆனால் அவர் தலைமை பதவியை ஏற்க முன்வராத நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17-ந்தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. போட்டியிட விரும்புவோர் நாளை முதல் 30-ந்தேதி வரை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராகுல் காந்தி ஆர்வம் காட்டாத நிலையில், மூத்த தலைவர்கள் சசி தரூர், அசோக் கெலாட் இடையே போட்டி இருக்கும் என தகவல் வெளியானது. இதற்காக சசி தரூர், சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். அதேசமயம், காந்தி குடும்பத்தின் நீண்ட நாள் விசுவாசியான, அசோக் கெலாட் தான் போட்டியிடுவதைக் காட்டிலும், ராகுல் காந்தியை எப்படியாவது போட்டியிட வைக்கவே ஆர்வம் காட்டினார். ராகுல் போட்டியிடாத பட்சத்தில் தான் போட்டியிட விரும்பினார்.

இந்நிலையில், கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை அசோக் கெலாட் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என அறிவித்தார். தான் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். அசோக் கெலாட் மேலும் கூறியதாவது:-

ராகுல் மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்ற அனைவரின் விருப்பத்தையும் ஏற்கும்படி அவரிடம் பலமுறை கேட்டுக் கொண்டேன். ஆனால் காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் அடுத்த தலைவராக வரக்கூடாது என்று தான் முடிவு செய்திருப்பதாக ராகுல் என்னிடம் தெரிவித்தார். நான் தலைவர் ஆக வேண்டும் என்று எல்லோரும் விரும்புவது எனக்கு தெரியும். அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன், ஆனால் ஒரு காரணத்திற்காக, காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறினார். இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

இந்த நிலையில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறியதாவது:-

கட்சியின் முன்னாள் தலைவராக மாறிய பின், சோனியா காந்திக்கு என்ன தகுதி இருக்கும்? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இது குறித்து முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தினரின் ரிமோட் கண்ட்ரோலில் இருப்பார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆக வருபவர், காந்தி குடும்பத்தின் ‘பினாமி’ யாகவே இருப்பார். அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார். ஆகவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல புதிய காங்கிரஸ் தலைவர் ரிமோட் மூலம் காந்தி குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுவார். அதற்கு ப.சிதம்பரம் கூறிய இந்த அறிக்கை ஒரு சான்றாக இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது கண்துடைப்பே தவிர வேறில்லை என்பதை இந்த அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இவ்வாறு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறினார்.