95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள்: சு.வெங்கடேசன்

95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக பா.ஜனதாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அவர்கள் 95% கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் எங்கே? என்கிற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பின்னர் டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டிருந்த சு.வெங்கடேசன், “பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகிதம் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்பியும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என்று பதிவிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் தனது பங்கிற்கு, “டியர் நட்டா ஜி, எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% கட்டுமானங்களை முடித்ததற்கு நன்றி. நானும் எம்பி சு.வெங்கடேசனும் தோப்பூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் தேடி பார்த்தோம். ஆனால் எந்த கட்டிடமும் இல்லையே? கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் போல..” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான படங்கள் டுவிட்டரில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.