உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உட்பட 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்டில் ரிஷிகேஷில் உள்ள வனந்தரா பகுதியில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த ரிசார்ட்டில் 19 வயது பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அந்த பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதேபோல் புல்கித் ஆர்யா சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரிசார்ட் இருக்கும் பகுதி போலீஸ் ஏரியாவுக்குள் வரும் பகுதி கிடையாது. இது வருவாய் துறைக்கு கீழ் வரும் பகுதி என்பதால், உள்ளூர் சட்டப்படி அவர்கள் புகாரை பதிவு செய்துள்ளனர். ஆனால் பாஜக தலைவருக்கு தொடர்பான விவகாரம் என்பதால் இவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். 4 நாட்கள் கழித்தே இந்த விவகாரம் உள்ளூர் சோஷியல் மீடியாவில் சர்ச்சையானது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிட்டு செப்டம்பர் 21ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்தது. இதன்பின் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் புல்கித் ஆர்யா முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் பாஜக தலைவரின் மகன் என்பதால் போலீசார் அவரிடம் சரியாக விசாரணை நடத்தவில்லை. அவர் மீது சந்தேகம் இருந்தாலும், அவரை கைது செய்து விசாரிக்காமல் இருந்துள்ளனர். அவருக்கு நிறைய சலுகைகளும் கொடுத்துள்ளனர்.
கடைசியாக 18ம் தேதி அந்த பெண் வேலைக்கு சென்ற பின் திரும்பி வரவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்ததில், ரிசார்ட் வெளியே இருக்கும் சாலையில் அந்த பெண் நடந்து போனதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதனால் ரிசார்ட் உள்ளேயேதான் ஏதாவது நடந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதன்பின் நடந்த விசாரணையில்தான் அந்த பெண்ணை புல்கித் ஆர்யாதான் கடத்தி கொன்றார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ரிசார்ட்டில் வேலை செய்யும் 2 ஆண்கள் உட்பட மூன்று பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்து கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் புல்கித் ஆர்யாவை கைது செய்தனர். ஆனால் இன்னும் அந்த பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. இந்த மர்மம் மட்டும் விலகவே இல்லை. ரிசார்ட் அருகே இருக்கும் நீர் நிலை ஒன்றில் பெண்ணின் உடலை அவர்கள் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி பாஜக நிர்வாகியின் மகன் என்பதால் போலீஸ் இதில் அலட்சியமாக இருப்பதாக உள்ளூர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.