பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பத்திரிகையாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகம் முற்போக்கான மாநிலமாக திகழ்கிறது; மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பில் முன்னிலை வகிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறந்த மனிதர். தமிழகத்தில் திமுக அரசுடன் நல்லுறவு நீடிக்கிறது. கல்வித்துறை தொடர்பான தமிழக அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு ஆபத்தான இயக்கமாகும். என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இயக்கங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆபத்தான இயக்கம்தான் என ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன். இவ்வாறு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில், மாநில அரசே நியமிக்கும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் தெரிவித்துள்ள கருத்தால் இம்மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.