உத்தரகண்ட் விடுதி கொலை: பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கேளிக்கை விடுதியின் பெண் வரவேற்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் உடல் கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை செய்த பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரித்வாரின் பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா, தனியார் கேளிக்கை விடுதி நடத்தி வந்தார். இங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த 19 வயது பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. உடடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி, கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட உடலைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கேளிக்கை விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா கொலை செய்து, பெண்ணின் உடலை கால்வாயில் வீசியது தெரிய வந்தது.

சட்டவிரோதமாக ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த அந்தகேளிக்கை விடுதி வெள்ளிக்கிழமை இரவு முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவின்பேரில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சௌரவ் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு, காவலர்கள் நடத்திய விசாரணையில், பெண்ணை கொன்று கால்வாயில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்போது, வழக்கை திசைதிருப்ப இம்மூவரும் முயன்றதாகவும், முறைப்படி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.