ஆளுநர் வேலையை மட்டும் ஆர்.என். ரவி பார்க்க வேண்டும்: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இல்லையெனில், பாஜக வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வேலையையும் பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில அரசுடன் சமீபகாலமாக தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பதை பார்க்க முடிகிறது. ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், திராவிடத்திற்கு எதிராகவும், சனாதனத்திற்கு ஆதரவாகவும் கருத்துகளை கூறுவதால் ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சனாதனம்தான் பாரதத்தை உருவாக்கியது என்றும், இந்தியாவை சனாதனம்தான் வழிநடத்துகிறது எனவும் அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது பெரும் சர்ச்சையானது. தமிழகத்தை பொறுத்தவரை, காலம் காலமாக திராவிடக் கொள்கை வேரூன்றி இருக்கிறது. அதற்கு முற்றிலும் எதிரான அம்சங்களை கொண்டது சனாதனம். ஆனால் பாஜகவினர் சனாதனத்தையே தூக்கிப் பிடித்து வருகிறார்கள். தற்போது அவர்களுக்கு ஆதரவாக அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆளுநரே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது அவர் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்துகிறது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கியுள்ள அமைப்புகளை சீர்குலைக்கக் கூடிய வகையிலும் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது. மேலும், மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை இருக்கிறது. புதிது புதிதாக மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. தொழிலாளர் விதவைச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கை, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றுகிறது. தான் நினைத்தால் யார் அனுமதியும் இன்றி ஒரு சட்டத்தை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு மத்திய அரசின் பலம் உள்ளது. அதனால் மின்சார திருத்தச் சட்ட மசோதாவை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது.

போலிஸாரால் தேடப்படும் வன்முறையாளர்கள் பாஜகவில்தான் சேர்கிறார்கள். அவர்களுக்கு பாஜக அடைக்கலம் கொடுத்து வருகிறது. என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம்; எத்தகைய வன்முறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம்; என்ன செய்தாலும் பாஜக நம்மை காப்பாற்றும் என அவர்கள் நினைக்கின்றனர். சமூக விரோதிகள் வன்முறையாளர்கள் என யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது.

ஆளுநருக்கு என்ன வேலை என்று அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக கூறியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் படியே அவர் செயல்பட வேண்டும். அதை விடுத்து, பாஜக தலைவரை போல ஆளுநர் செயல்படக் கூடாது. ஆனால், அவர் அவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு வேலையையும் பார்க்க முடியாது. சனாதனம் தான் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால், சனாதனம் தான் மக்களைப் பிளவுபடுத்துகிறது. ஆளுநருக்கு எந்த வாத்தியார் சொல்லிக் கொடுத்தார் என்று தெரியவில்லை. இவ்வாறு முத்தரசன் கூறினார்.