இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இயற்கையை காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.09.2022) செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், இயற்கையை நாம் நினைத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடியும். அதைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை எல்லோரும் பெற்றிட வேண்டும். அந்த அடிப்படையில் நம்மிடத்தில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த பசுமை தமிழ்நாடு இயக்கம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.

வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும்போதெல்லாம், இயற்கையையும் காத்து வளர்ச்சியை வழிநடத்தி வருகிறோம். அதனால்தான் தமிழ்நாடு அரசினுடைய பசுமைக் கொள்கை!
இயற்கையையும் – பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும். ஏனென்றால், இயற்கை என்பது அரசினுடைய சொத்து, அது அரசினுடைய சொத்து மட்டுமல்ல – மக்களின் சொத்து! எதிர்கால சமுதாயத்தின் சொத்து! அத்தகைய இயற்கைச் சொத்தை, அரசும் – மக்களும் காக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில்தான், இந்த பசுமைத் தமிழகம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்லுயிரை நாம் காக்க வேண்டும். இந்த உலகம் என்பது மனிதர்களான நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. புல் பூண்டு தொடங்கி அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம். எனவே அவற்றை நாம் காக்க வேண்டும்.

இப்போது நமக்கு இருக்கக்கூடிய மாபெரும் அச்சுறுத்தல் என்பது காலநிலை மாற்றம்தான். அதிகப்படியான வெப்பம், வெயில் அடிக்கிறது. மழை என்பது சீரானதாக இல்லாமல், பலமாக அடித்துவிட்டு நின்று விடுகிறது. மழைக்காலம் – வெயில் காலம் என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு நாடு இப்போது மாறி இருக்கிறது, காலநிலை மாறி இருக்கிறது. மழை எப்போது வரும், மழை எப்போது வராது என்று சொல்லமுடியாத அளவிற்கு காலநிலை மாறியிருக்கிறது. எனவே காலநிலைகளை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல்காற்று அதிகப்படியாக வீசிக் கொண்டு இருக்கிறது. தோல் எரியக்கூடிய அளவுக்கு காற்று வீசுகிறது. இவை அனைத்தும் இயற்கையை – பசுமையை நாம் மறந்ததால் ஏற்படக்கூடிய எதிர்வினைகள்தான் என்பதை நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும். அதற்கு நாம் வனம், காடுகள் ஆகியவற்றை காக்க வேண்டும். காடுகளை, பசுமைப் பரப்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். இயற்கை நீர் நிலைகளைக் காக்க வேண்டும். இருக்கும் நீர் நிலைகளை தூர்வாரி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மண்ணின் வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றை இதற்கு மேலும் மாசுபடுத்தாமல் கவனித்தாக வேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்காகவே “மீண்டும் மஞ்சப்பை” என்ற இயக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.

நிலையான வாழ்வாதாரம், நிலையான வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு – ஆகியவற்றில் வனமும் மரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மரங்களை வைப்பது, வனங்களைப் பாதுகாப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் கவனம் செலுத்த வேண்டும். அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியாக 920 கோடியே 58 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இதன் மூலமாக சுற்றுச்சூழலை மேம்படுத்த இருக்கிறோம். பசுமையாக்குதல் நடக்க இருக்கிறது. வனப் பகுதியின் சமூகப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட இருக்கிறது.

அதேபோல், தரம் குன்றிய வன நிலப் பரப்புகளை மறுசீரமைப்பு செய்து, அவ்விடத்தில் புதிய வன மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்காக, நபார்டு வங்கி 481 கோடியே 14 லட்ச ரூபாயையும் வனத்துறைக்கு வழங்கியிருக்கிறது, அதற்கான ஒப்புதலையும் தந்திருக்கிறது என்பதை நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இயற்கையைக் காத்தல் என்பது ஏதோ மக்களுக்குத் தொடர்பில்லாததைப் போல் சிலர் நினைக்கிறார்கள். இயற்கை மூலமாக மக்களைக் காப்பதுதான் இது என்பதை தயவு செய்து யாரும் மறந்துவிட வேண்டாம். 2018-ஆம் ஆண்டு கஜா புயல் அடித்தது. தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைப் பாதித்தது. அப்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை பகுதியில் இருந்த அலையாத்தி காடுகள்தான் அந்தக் கடுமையான புயலையும் தாங்கி மக்களைக் காத்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே அதிகளவிலான நாட்டு மரங்களை நடுவது இந்த பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாக இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பாராட்டுகிறேன். பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களை தாக்குப் பிடிக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும். அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்கியாக வேண்டும்
இந்த இயக்கத்தின்கீழ் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் 350 நாற்றங்கால்களில் 2 கோடியே 80 லட்சம் நாற்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதை குறிப்பிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

பொருளாதார முக்கியத்துவத்தையும் மனதில் வைத்து சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல், மர உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்போம். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், உழவர்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க இந்தத் திட்டம் உதவும் என நம்புகிறேன். ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவச் செல்வங்கள், சுய உதவிக்குழுக்கள், தொழில்முனைவோர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள். இந்த இயக்கத்தினுடைய மாபெரும் பணி என்னவென்றால், இதை வெற்றியடையச் செய்ய வேண்டும். இந்த வெற்றி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அந்த வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய பொறுப்பு உங்களிடத்திலேதான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களை உருவாக்கி இத்தமிழகத்தினைப் பசுமைமிகு தமிழகமாக மாற்றிட வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.