தமிழ் மொழியால் இணைந்தவர்களை சாதி-மதத்தால் பிரிக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழியல்ல அது உயிர். மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்கவே முடியாது என தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். டிவிஎஸ் எமரால்ட் அபார்ட்மெண்ட் திருவிழா: சென்னையில் 5 அல்டிமேட் ஆபர்கள்

உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதன்பிறகு அதனை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழை கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழை திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

முத்தமிழறிஞர் – முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழைப்பற்றி அடிக்கடி பெருமையோடு சொல்லுவார்கள். அதனை நான் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை இந்த நிகழ்ச்சியிலும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

“உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது. அத்தகைய தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ்ப் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை என்னுடைய வாழ்நாளில் கடமையாக மட்டுமல்ல; என்னுடைய வாழ்நாளில் பெருமையாகவும் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

தமிழே என அழைப்பதில் சுகம். தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்முடைய உயிர். தமிழை, தமிழே என அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இருக்காது. தமிழ் வாழும் காலம் எல்லாம் தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். வீழ்வது நாமாக இருப்பதாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பது தான் திமுகவின் முழக்கம். தமிழை வளர்க்க தனி அக்கறையுடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் அரசு சார்பில் இதயப்பூர்வமான நன்றி. இதற்கு மகுடம் வைப்பது போல் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது.

30 நாடுகளில் அதிகமாகவும், 60 நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளில் எழுதவும், படிக்கவும் மறந்த தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத்தான தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாதி, மதத்தால் பிரிக்க முடியாது 30 நாடுகள், 20 மாநிலங்களை சேர்ந்த தமிழ் அமைப்பின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைய வழியில் பங்கேற்றுள்ளனர். உணர்வால், உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், நார்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளனர். மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தமிழ் இதற்கு முன்பு தமிழ் பாதுகாப்பு கழகம் துவங்கப்பட்டது. அப்போது தமிழை பாதுகாக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. தற்போது தமிழை பரப்ப வேண்டிய காலம். இதனால் தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இதன் உயரிய நோக்கம்.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் கனவை – செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவை – நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது.

தொண்டு செய்வாய் தமிழுக்கு; துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே ! – என்று வலியுறுத்தி, இந்த இனிய வாய்ப்பைப் பெற்ற இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.