சீனா – பாகிஸ்தானை ஐநாவில் கடுமையாக தாக்கி பேசிய ஜெய்சங்கர்!

ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானையும், சீனாவையும் விமர்சனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

ஐநா பொதுக்குழு கூட்டத்தின் 77வது சந்திப்பு தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. எல்லா வருடமும் செப்டம்பர் மாதம் இந்த கூட்டம் நடப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போது நடக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இந்தியா சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐநா தடை விதிப்பதை சீனா “வீட்டோ” அதிகாரம் மூலம் தடுப்பதற்கு எதிராக இன்று இந்தியா கடுமையான கருத்துக்களை எடுத்து வைத்தது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:-

கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும். பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சீனா ஐநாவில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஐநாவில் இந்தியா பல முறை தீர்மானங்களை கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இதை சீனா ஒவ்வொரு முறையும் தடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இந்திய எதிர்ப்பு இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளை ஆதரிக்கும் அளவிற்கு கூட சீனா சென்றுவிட்டது. முன்னதாக ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் இந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவருமான அப்துல் ரவூப் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் கோரிக்கை வைத்தபோது அந்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் சீனாவை இன்று அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கண்டித்து உள்ளார்.