நடிகர் தனுஷ் காமெடி நடிகர் போண்டா மணிக்கு பண உதவி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்துள்ளார்.

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்ட நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் நடிகர் போண்டா மணிக்கு செய்யப்படவிருக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், நடிகர்களிடம் சமீபத்தில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் காமெடி நடிகர் போண்டா மணி. அவரது நிலையை அறிந்த சினிமா பிரபலங்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் அதிகப்படியாக நடித்து பிரபலமான போண்டா மணிக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக நடிகர் வடிவேலு உறுதி அளித்துள்ளார். மேலும், போண்டா மணியுடன் போனில் பேசியுள்ள வடிவேலு, விரைவில் அவரை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார். போண்டா மணியின் நிலை குறித்து அறிந்ததுமே நடிகர் விஜய்சேதுபதி போண்டா மணியின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை போட்டுள்ளார். இதை அறிந்த போண்ட மணி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் விஜய்சேதுபதி கொடுத்த ஒரு லட்சம் எனக்கு ஒரு கோடி மாதிரி என பாராட்டி நன்றி தெரிவித்தார்.

விஜய்சேதுபதியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது போண்டா மணியின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் உதவியாக அளித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், தம்பி தனுஷ் நீ அனுப்பிய ஒரு லட்சம் ரூபாய் பணம் எனக்கு வந்து சேர்ந்து விட்டது. உன் நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி எனக் கூறியுள்ளார்.