தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை: சசிகலா!

தேனாம்பேட்டையில் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு சசிகலா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சென்னை தேனாம்பேட்டையில் நிறுவப்பட்டு இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் அப்பழுக்கற்ற முகத்தினை சேதப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நீங்கள் கண்டிப்பாக இதயமே இல்லாத ஒரு பிறவியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

எங்கள் பாசத் தலைவருடைய மக்கள் நலத் திட்டங்களால் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கூட ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக பயனடைந்தவர்களாகத் தான் இருக்க முடியும். இந்த பாவ செயலுக்கு பிராயச்சித்தமாக நீங்கள் எத்தனை கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் எந்த பரிகாரமும் கிடைக்கப் போவது இல்லை. இது போன்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளை சேதப்படுத்துவதை விட்டுவிடுங்கள் – ஒரு தாயாக உங்களை கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து திருந்தப்பாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு பாவமூட்டைகளை சேர்த்து வைக்காமல், நாலு பேருக்கு உதவிடும் வகையில் நல்ல மனிதர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.

திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, தமிழக மக்களை காப்பாற்றிய நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதற்கு நான் மிகவும் வேதனை அடைகிறேன். உண்மையான திராவிட சிந்தனை உள்ளவர்கள் திராவிட தலைவர்களின் பெயர்களையும், புகழையும் பேணி பாதுகாத்திட வேண்டுமே தவிர, திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொள்வதால் எந்த பயனும் இல்லை.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக தமிழக காவல் துறை செயலாற்றியது. அதே போல் தற்போதும் செயல்பட்டு இது போன்று தமிழகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் நடைபெறாத வகையில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கும் தெய்வங்களாக நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கின்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். மேலும், இது போன்று நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகளை அவமதிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.